search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை நகை திருட்டு"

    அரியாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடந்து சென்ற ஆசிரியையிடம் செயினை பறித்து சென்று விட்டனர்.
    அரியாங்குப்பம்:

    அரியாங்குப்பம் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கலையரசி (வயது 28). இவர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை கலையரசி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்.

    அரியாங்குப்பம் பழைய பாலம் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கலையரசியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர்.

    உடனே, சுதாரித்து கொண்ட கலையரசி ஒரு கையால் தாலியை கெட்டியாக பிடித்து கொண்டார். ஆனால், செயின் முழுவதும் கொள்ளையர்கள் கையில் சிக்கிக் கொண்டது.

    அவர்கள் கையில் கிடைத்த செயினுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பறிபோன செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து கலையரசி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியாங்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக கோவில்களில் உண்டியல் கொள்ளை, வீடு புகுந்து திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த தொடர் திருட்டு சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜெயமூர்த்தி ஆகியோர் தொடர் கொள்ளை சம்பவங்களை அரசு தடுக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு முதல்-அமைச்சர் பதில் அளித்து பேசும் போது, கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி செல்வார்கள் என்று நேற்று காலை அறிவித்து இருந்த நிலையில் மாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×